Thursday, 17 October 2013

காலம் கெட்டுப்போச்சு!

காலம் கெட்டுப்போச்சு - அப்படினு நான் சின்னவயசா இருக்கும்போது பெரியவுங்க சொல்லுவாங்க, அதெல்லாம் ஒன்னுமில்லை, எப்பவும் போலத்தான் இருக்குனு மைனருங்க வாதிடுவாங்க. ஆனாப் பாருங்க பெரியவுங்க ஆனா இந்த டயலாக்க கட்டாயமா நானும் சொல்லவேண்டி வரும்னு எதிர்பார்க்கல.

போனவாரம் என் மகள கல்லூரியிலிருந்து (விடுதியிலிருந்து) அழைத்துவரச் சென்றிருந்தேன், அப்போ அந்த வார்டனம்மா கிட்ட பேச்சுக்கொடுத்தேன் (எப்பவும்போல!) அவிங்க சொன்னாங்க - கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்த பெண் - தனது பாய்பிரண்டுடன் விடுதியிலிருந்து - தனது அண்ணன் என்று கூறி ஒரு நாள் வெளியே சுற்றச்சென்றுவிட்டது, அந்தச் சமயம் பார்த்து, மகளைப்பார்த்து வெகுநாளாச்சே என்று பெற்றோர் இருவரும் வந்துவிட்டனர். அண்ணனுடன் வெளியே சென்றுள்ளாள் என்று வார்டனம்மா கூற, எங்களுக்கு ஒரே பெண்தானே, அண்ணனெல்லாம் கிடையாதே என்று அந்தத்தாய் அப்படியே உறைந்து போய்விட்டாராம்.  நெஞ்சிலே நெருப்பைக் கொட்டிட்டாளே என்று ஒரே அழுகை. பெண் வரும்வரை காத்திருந்து கல்லூரியிலிருந்தே நீக்கம் செய்து அழைத்துச்சென்றுவிட்டனராம்.

ஒரு கணம் அந்தப்பெற்றோரின் நிலையில் இருந்து பாருங்கள் - அந்த வேதனை புரியும். அதைவிட அந்தப்பெண்ணின் நிலை - அப்பப்பா!

இப்பச் சொல்லுங்க - காலம் கெட்டுப்போச்சுதானே?

Friday, 27 September 2013

கதம்பம் - 1

நம்ம மக்கள் ஏன் எப்பவுமே பைனரியிலேயே முடிவு எடுக்குறாங்க?
உனக்கு ஜெயலலிதாவப் புடிக்காதா? அப்ப நீ தி.மு.க,
பெரியாரை விமர்சனம் செஞ்சா பார்ப்பனர்,
கடவுள் பத்தி கொஞ்சம் சந்தேகம் என்றால் - நாஸ்திகன் - என்னங்க இது அக்கிரமமா இருக்கு (அதும் இணையத்தில் இந்தக் கொடுமை ரொம்ப). நம்ம ஜார்ஜ் புஷ் சொன்ன மாதிரி - நீங்கள் எங்களுடன் இல்லையென்றால் எங்கள் எதிரிகளுடன் கூட்டாளி என்று அர்த்தம் - இதுவே நம் வழக்கமாகிப்போய் பலருடன் எனக்கு சங்கடம் நேர்ந்திருக்கிறது. சாதாரண கருத்துக்கணிப்புகளிலேயே ஆம்/இல்லை/தெரியாது என சாய்ஸ் இருக்கும்போது ஏன் இந்த பைனரி முடிவு?
=======================================
உலகத்திலேயே ரொம்பக் கொடுமையான வலி எதுனு சொல்ல முடியுமா? என்னைக்கேட்டால் தலைவலிம்பேன் - பலர் பல்வலி / சிறுநீரகக்கல் வலி / நெஞ்சுவலி எனச் சொல்வார்கள். கை-கால் போய் பலர் கிடக்கும்போது சுண்டுவிரலில் பட்ட காயத்திற்கு அழுதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு முறை - ஒரே ஒரு முறை உங்கள் ஊரில் (அருகில்) இருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று பாருங்கள் - நீங்கள் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று தெரியும்
=====================================
பைக்கில் செல்லும்போது இந்த நாய்த்தொல்லை - அப்பப்பா! அதுவும் இருட்டில் செல்லும்போது எதிரே வரும் வண்டியின் வெளிச்சம் நம் கண்களைக் குருடாக்க, அப்போது ஏதாவது நாய் ரோட்டில் வந்தால் ஒரு இழவும் தெரியாது - இதை எப்படிச் சமாளிக்க?
=======================================
ஒரு விவசாயி - சரியாகக் கணக்குப்போட வராது. எப்போதும் சந்தையில் விளைபொருட்களை விற்க தன் மனைவியைத்தான் அனுப்புவான். ஆனால் ஒரு முறை அவளுக்கு உடம்பு சரியில்லாததால் அவனே செல்லவேண்டி வந்தது. "என்னடி செய்ய" என்று மனைவியிடம் கேட்க, அவள் "படி காலனா வீதம் விற்று வாருங்கள்" என்று சொல்லி அனுப்பினாள்.

போனவுடன் ஒருவன் வந்து பயிறு ஐந்து படி வேண்டுமென்று கேட்டான், இவனும் படியெடுத்து ஒரு படி அளந்து போட்டவுடன் "காலனா காசு கொடு" என்று கேட்டான்.

வாங்க வந்தவனுக்கு இவன் சரியாகக் கேட்கவில்லையோ என்று நினைத்துக்கொண்டு "எனக்கு ஐந்து படி பயிறு வேண்டுமப்பா, இன்னும் நாலு படி போடு" என்றான்

எப்படி ஐந்து படிக்குக் காசு கணக்குப்போடறதுன்னு தெரியாம  "ம்க்கும்ம், முதல்ல போட்டதுக்கே இன்னும் காசு கொடுக்கல, இந்த லச்சனத்துல இன்னும் நாலுபடி வேணுமாம்"  அப்படின்னானாம்.

Wednesday, 25 September 2013

ஒரு குட்டிக்கதை!

கடற்கரையோரமா நின்று கொண்டிருந்த ஒருவன், இந்தத் தண்ணீரையெல்லாம் அளந்தால் எத்தனை லிட்டர் வரும் என்று யோசிச்சானாம்.

எனக்கும் அப்படித்தான் இருக்கு இந்த வலையுலகம்.

முதல் பதிவு

தமிழ் உலகிற்கு எனது முதல் வணக்கம்.